தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள ஜம்மு காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், அமைதிப் பூங்கா எனக் கூறப்படும் தமிழ்நாட்டில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன நாளை முன்னிட்டு, அக்டோபர் 18, 25 அல்லது நவம்பர் 1-ம் தேதி தமிழகம் முழுவதும் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி, அமைப்பின் மாநிலச் செயலாளர் ஜெகதீசன் டிஜிபியிடம் விண்ணப்பித்திருந்தார். இதற்கு எந்தப் பதிலும் கிடைக்காததால், ஊர்வலத்திற்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, ஒவ்வோர் ஆண்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஊர்வலத்திற்கு அனுமதி கோரி 21 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், அக்டோபர் 3-ம் தேதிதான் விண்ணப்பம் அளிக்கப்பட்டதாகக் கூறினார். மேலும், அனுமதி கோரப்பட்ட வழித்தடத்தில் ஊர்வலம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், விழாக்காலத்தில் ஊர்வலம் நடத்தினால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, ஒவ்வோர் ஆண்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிலையில், ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, தற்போது தவெக ஆட்சியில் திராவிடர் கழகம், திமுக, அதிமுக, ஆர்எஸ்எஸ் என அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள ஜம்மு காஷ்மீரிலேயே ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், அமைதிப் பூங்கா எனக் கூறப்படும் தமிழ்நாட்டில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினார். அனுமதி மறுப்பதன் மூலம் அரசே தேவையற்ற விளம்பரத்தை ஏற்படுத்தித் தருவதாகவும் நீதிபதி கருத்துத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யனுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.