திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சீ. ரமேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளர் தொப்பி அணிந்தபடி கோயிலுக்குள் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் நவம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளது.
இவ்விழாவில் 35 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கார்த்திகை தீபத் திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சீ. ரமேஷ் ஆகியோர் அண்ணாமலையார் கோயிலில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் தொப்பி அணிந்து கோயிலுக்குள் சென்றது தொடர்பாக எதிர்ப்பு எழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் தொப்பியைக் கழற்றிவிட்டு ஆய்வில் பங்கேற்றதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், கோயிலுக்குள் தங்களது மத அடையாளமான தொப்பியை அணிந்தபடி இஸ்லாமிய உதவியாளரை அழைத்துச் சென்ற அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சீ. ரமேஷ் ஆகியோரின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பைச் சுட்டிக்காட்டிய அவர், கோயிலின் கொடிமரத்தைத் தாண்டி இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவது தொடர்பான விதிமுறைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
உயர்நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டிக் கேள்வி
உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் வழிபட விரும்பினால், சம்பந்தப்பட்ட கடவுளின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும், இந்து மதக் கலாச்சாரம் மற்றும் கோயில் விதிமுறைகளைப் பின்பற்றுவதாகவும் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்து, கோயில் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்றும், சம்பந்தப்பட்ட உதவியாளர் இந்து கடவுளின் மீது நம்பிக்கை இருப்பதாக உறுதிமொழி அளித்தாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.