தூத்துக்குடி, ஜூலை 15: கர்மவீரர், கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று பல்வேறு இடங்களில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதலில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட தலைவர் சித்ராங்தகன் தலைமையில் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், வ.உ.சி. மார்க்கெட் அருகே அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட தலைவர் சித்ராங்தகன், "கர்மவீரர் காமராஜர் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், ஏழை எளிய மக்களின் வாழ்வில் கல்வி என்ற ஒளியை ஏற்றிய மாமனிதர். பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கும், ஏழை மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்புகளை உருவாக்கிய அவரது தொலைநோக்கு சிந்தனையே தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமாக திகழ்கிறது. எளிமை, நேர்மை, தன்னலமற்ற மக்கள் சேவை ஆகியவற்றின் அடையாளமாக விளங்கிய காமராஜரின் கொள்கைகளும் பண்புகளும் இன்றைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக உள்ளன. அவரது உயரிய சேவைகளை என்றும் போற்றிக் காக்க வேண்டும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேஷ் கண்ணன், செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராமன், வசந்தன், மாநில, மாவட்ட, அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கர்மவீரர் காமராஜருக்கு மரியாதை செலுத்தினர்.