தமிழக சட்டமன்றத்தில் மத அரசியல் அரங்கேறுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக சட்டமன்ற சபாநாயகர் பதவி சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலையுடன் செயல்பட வேண்டிய அரசியலமைப்பு பதவி என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தற்போதைய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தனது பதவியின் கண்ணியத்தை மறந்து, தான் சார்ந்த மதத்தின் ஒரு பிரிவுக்கு இடஒதுக்கீடு கோரிக்கை விடுப்பதாகவும், இது முதலமைச்சர் விஜய்க்கு கட்டளையிடுவது போன்று அமைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், தவெக அரசு பொறுப்பேற்றது முதல் முதலமைச்சர் விஜய் சிறுபான்மையினருக்கான அரசு என முன்னிலைப்படுத்தி வருவதாகவும், அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தனது மத நம்பிக்கைகள் குறித்து பேசுவதுடன், பைபிள் வசனங்களையும் குறிப்பிடுவதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தனிப்பட்ட மத நம்பிக்கைகளை விமர்சிக்கவில்லை என்றும், ஆனால் அவற்றை சட்டமன்றத்திற்குள் வெளிப்படுத்துவது அவையின் மாண்பை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, சபாநாயகர் மற்றும் தவெக அமைச்சர்கள் தங்களது தனிப்பட்ட சாதி, மத விவகாரங்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வராமல், சட்டமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.